ஒரு காலத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழகத்திலும் ஊடங்களில் மெகா சீரியல்களையே பார்க்க முடியும். ஆனால் தற்பொழுது ஆட்டம், பாட்டம் என்ற கூத்தாட்டங்களை ஊடக நிறுவனங்கள் அரகேற்றம் செய்து வருகின்றன. மெகா சீரியல்களின் மீது மக்களுக்கு ஒரு அலுப்பு ஏற்பட்டு விட்ட நிலையில், இந்த Reality Shows மக்களை கவர்கின்றது.
மானாட மயிலாட, மஸ்தானா மஸ்தானா, அசத்தப் போவது யாரு தொடங்கி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு, கானாக்குயில் என தமிழகத்தில் இந்த நிகழ்ச்சிகள் பல வடிவங்களை பெற்று இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பெரும் பேறாகவும், இந்த நிகழ்ச்சியின் நடுவர்களை உச்சத்திலே அமர்ந்திருக்கும் பீடாதிபதிகளாவும் உருவகப்படுத்தி இருக்கின்றார்கள்.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணியமான குடும்பத்தில் குடும்பத்தலைவர்களாகவும், தலைவிகளாகவும் இருந்தவர்கள் டிவியில் தோன்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் டிவியில் ஆடத்தெரியாமல் தம்பதி சகிதமாக ஆடுகிறார்கள்.
இறுதியிலே பலர் வெளியேற்றப்பட்டு கண்ணீரும், கம்பலையுமாக சிலர் வெளியேற, சிலர் கண்ணீருடன் மேடையிலே நாடகமாட என நிகழ்ச்சி முடிகிறது. ஆனால் இதில் தோற்பவர்கள் கடுமையான மனரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
தங்களின் நிகழ்ச்சிக்காக குழந்தைகளை கூட பலியாக்கும் நிலையை ஊடக முதலைகள் மேற்கொண்டிருக்கின்றன.
ஊடக விமர்சனம் வலைப்பதிவுலே, ஊடகங்களின் இத்தகைய சமூக வன்முறை குறித்த விடயங்களை எங்கள் ஊடக விமர்சனக் குழு விமர்சனம் செய்யும்.
